பள்ளிப்பாளையம் கந்துவட்டிக் கும்பல் கடன் வாங்கிய பெண்ணை ஆபாச செக்ஸ் சி.டி எடுத்து பரப்பியுள்ளனர்.

கந்துவட்டி… ஆபாசப்படம்… கொலை! பள்ளிப்பாளையம் பயங்கரம்

கந்து வட்டிக்காகக் கொடூரமாக மிரட்டும் கும்பல் ஒருபடி மேலே போய்… வட்டிகட்ட முடியாத பெண்ணை ஆபாசப் படம் எடுத்து பரப்பியுள்ளனர். இதைத் தட்டிக்கேட்ட மார்க்சிஸ்ட் கட்சியின் கிளை செயலாளரை படுகொலை செய்து தங்கள் ஆத்திரத்தைத் தீர்த்துக் கொண்டிருக்கிறார்கள்.
இப்படி அடுத்தடுத்த அப்பட்டமான அராஜகங்கள் நாமக்கல் மாவட்டம் பள்ளிப்பாளையம் வட்டாரத்தையே உலுக்கிப் போட்டிருக்கின்றன.

பள்ளிப்பாளையம், குமார-பாளையம், திருச்-செங்கோடு பகுதிகளின் உயிர்த் தொழிலே விசைத்தறி தொழில்தான். வியர்வை சிந்தி பாடுபட்டாலும் இந்தத் தொழிலில் கிடைப்பது சொற்ப வருமானமே! இதையே காரணமாக வைத்து விசைத்தறித் தொழிலாளர்களிடையே ஊடுருவத் தொடங்கினார்கள் கந்துவட்டிக்காரர்கள். இந்தக் கும்பலிடம் கடன் வாங்கி நைந்துபோய், பணத்தைத் திரும்பச் செலுத்த முடியாமல் தற்கொலைக்கு தள்ளப்பட்டவர்கள் பலர். கந்துவட்டி ஒழிப்புச் சட்டத்தை தமிழக அரசு கொண்டுவந்தாலும்… காவல்துறையும், அதிகாரி-களும் இந்தச் சட்டத்தைத் தூக்கிக் குப்பையில் போட்டுவிட்டதால், கந்துவட்டி கும்பலின் ஆட்டம் அதிகமாகிக் கொண்டே போனது.

இந்த ஆட்டத்தின் உச்சம்தான் அந்த அபலைப் பெண்ணுக்கு நேர்ந்திருக்கிறது.

பள்ளிப்பாளையம் வட்டாரத்தைச் சேர்ந்த ஒரு விசைத்தறிக் குடும்பம், வாங்கிய கந்துவட்டிக் கடனை கட்டமுடியாமல் விழிபிதுங்கியுள்ளது. இதனால் வீடு தேடிவந்த கும்பல், பணத்துக்குப் பதில் வீட்டில் இருந்த இளம்பெண்ணைத் தூக்கிச் சென்றது. தனி அறையில் அந்தப் பெண்ணுடன் கும்பலை சேர்ந்த ஒருவனை உல்லாசம் அனுபவிக்கச் செய்து அதை செல்போனில் படம் பிடித்துள்ளனர். சுமார் இருபது நிமிடங்கள் ஓடக்கூடிய அளவுக்கு அந்த காட்சிகளை சி.டி.யில் பதிவு செய்து விற்பனை செய்த அந்தக் கும்பல், அந்தக் காட்சிகளை இன்டர்நெட்டிலும் பரவவிட்டுள்ளது.

தன் பக்கத்து வீட்டுக்-காரர்கள்கூட இந்தக் கண்றாவிக் காட்சிகளை செல்போனில் பார்த்துவருவதை அறிந்து பதறிய அந்தப் பெண், தனது தாயாரிடம் சொல்லி அழுது புலம்ப… குடும்பத்துடன் கந்துவட்டி கும்பலிடம் சென்று நியாயம் கேட்டிருக்கிறார்கள். அப்போது கிடைத்தது கொலைமிரட்டல்தான்.

பின்னர், பள்ளிப்பாளையம் அருகே உள்ள அக்ரஹாரம் சி.பி.எம். கிளை செயலாளர் வேலுச்சாமியிடம் பாதிக்கப்பட்ட பெண்ணின் தாயார் நடந்ததைச் சொல்லி அழ… ஏற்கெனவே கந்துவட்டிக்காரர்களை எதிர்த்து போராட்டங்கள் நடத்தி வந்த வேலுச்சாமி, இதில் தீவிர கவனம் செலுத்தினார். பாதிக்கப்பட்ட இளம்பெண்ணை மாதர்சங்க நிர்வாகி ஜெயமணி மூலமாக, பள்ளிப்பாளையம் காவல்துறையிடம் புகார் கொடுக்க அனுப்பி வைத்தார் வேலுச்சாமி. ஆனால், அந்தப் பெண் கந்துவட்டி கும்பலுக்குப் பயந்து காவல்நிலையத்தில் புகார் கொடுக்கவில்லை.

இதனிடையே மார்ச் 10-ம் தேதி இரவு வேலுச்சாமியின் வீட்டுக்கு ஐந்து பேர் கொண்ட ஒரு கும்பல் சென்றது. வேலுச்சாமி வீட்டில் இல்லாத நிலையில் அவரை அங்கிருந்தே மொபைலில் தொடர்புகொண்டு மிரட்டியதோடு, அவரது குடும்பத்தினரையும் மிரட்டிவிட்டுச் சென்றிருக்கிறார்கள்.

வீடு திரும்பிய வேலுச்சாமி, இப்படி-யாவது இந்தப் பிரச்னையை போலீஸின் கவனத்துக்கு எடுத்துச் செல்வது என முடிவெடுத்து உடனே பள்ளிப்பாளையம் காவல்நிலையம் சென்றார். புகார் கொடுத்துவிட்டு தன் தம்பியோடு திரும்பிக் கொண்டிருந்தவரை… அவரது தம்பியின் கண்ணெதிரே கொடூரமாக வெட்டிச் சாய்த்தது கந்துவட்டி கும்பல். அவசரமாக ஈரோடு ஜி.ஹெச்.சுக்குக் கொண்டு போக… வழியிலேயே வேலுச்சாமி உயிர் இழந்தார். இதனால் அதிர்ச்சி அடைந்த ஈரோடு, நாமக்கல், சேலம் மாவட்ட கம்யூனிஸ்ட் தொண்டர்கள் அவரது பிணத்தை வாங்க மறுத்து ஆர்ப்பாட்டம் நடத்த… நாமக்கல் மாவட்ட எஸ்.பி., பாரி பேச்சுவார்த்தை நடத்தி அவர்களை சமதானப்படுத்தி அனுப்பி வைத்தார்.

பள்ளிப்பாளையம் சி.பி.எம். ஒன்றியச் செயலாளர் அசோகன் நம்மிடம், ‘‘வேலுச்சாமி இந்த கந்துவட்டி கும்பலைப் பற்றி ஏற்கெனவே எங்கக்கிட்ட சொல்லியிருக்கார். ஆனா போலீஸ்கிட்ட இந்தத் தகவலைச் சொன்னப்ப அவங்க எந்த நடவடிக்கையும் எடுக்கல. வேலுச்சாமி புகார் கொடுத்துவிட்டுப் போனதைப் பார்த்துட்டுதான் ரவுடிக் கும்பல் கொன்னுருக்கு. இங்க மட்டும் ஐம்பதுக்கும் மேற்பட்ட கந்துவட்டி கும்பல் திரியறாங்க. ஆனா, போலீஸ் அவங்களையெல்லாம் கண்டுக்காது. ஏன்னா மக்களைப் பிழிஞ்சு வாங்குற கந்துவட்டியில ஒரு பகுதி போலீஸுக்குப் போயிடுதே. இதனால்தான், போலீஸ் ரவுடிகளுக்குத் துணை போகுது.

ரெண்டு வருஷத்துக்கு முன்னாடி தறி பட்டறையில வேலை செய்யறவங்கக்கிட்ட கிட்னி எடுத்து விற்றது கந்துவட்டி கும்பல். அது பெரிய பிரச்னை ஆனவுடனே கொஞ்சம் அடங்கி இருந்தவங்க, இப்ப மறுபடியும் ஆரம்பிச்சிட்டாங்க. பக்கத்து மாவட்டத்திலும் இந்த அட்டகாசம் ரொம்ப நாளா நடக்குது. அரசுதான் கடுமையான நடவடிக்கை எடுத்து இந்தக் கும்பலை ஒழிக்கணும்’’ என்றார் கோபமாக.

இந்த நிலையில், 14-ம் தேதி பள்ளிப்பாளையம் பகுதியில் அடிதடி வழக்குகளில் சம்பந்தப்பட்ட ‘தல’ சிவா என்பவரைக் கைது செய்திருக்கிறது போலீஸ். இதுபற்றி போலீஸ் வட்டாரத்தில் கேட்டால், ‘‘வேலுச்சாமி கொலை வழக்கில் அவரைக் கைது செய்யவில்லை. பழைய வழக்குகளுக்காகக் கைது செய்திருக்கிறோம்’’ என்கிறார்கள்.

ஆனால், ஏரியா மக்களோ, ‘‘அந்த ‘தல’ சிவாவும் கந்துவட்டி நடத்துற ஆளுதான். அவருக்கு போலீஸ் சப்போர்ட் ரொம்பவே இருக்கு. கந்துவட்டி கும்பல் மேல யாரு போய் புகார் கொடுத்தாலும் போலீஸ் வாங்கறதில்லை’’ என்கிறார்கள் ஒரு வித மிரட்சியுடன்.

நாமக்கல் மாவட்ட கலெக்டர் சகாயத்திடம் இது பற்றிப் பேசினோம். ‘‘கந்துவட்டி கும்பல் பற்றி தாசில்தாரிடம் விசாரிக்கச் சொல்லியிருக்கிறேன். தொழிலாளிகளுக்குக் கட்டாயமாகக் கந்துவட்டிக்குப் பணம் கொடுத்தாலும் அவர்கள் சட்டத்தின் மூலம் நிறுத்தப்படுவார்கள்’’ என்றார்.

மாவட்ட எஸ்.பி.யான பாரியோ, ‘‘பள்ளிப்-பாளையம் இன்ஸ்பெக்டர், சப் & இன்ஸ்பெக்டர் ஆகியோர் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர். வேலுச்சாமி கொலை வழக்கை நாங்கள் தீவிரமாக விசாரித்து வருகிறோம். விரைவில் சம்பந்தப்பட்ட அனைத்து குற்றவாளிகளையும் பிடிப்போம்’’ என்கிறார்.

வேலுச்சாமி கொலைக்கு நீதிகேட்டு போராட பள்ளிப்பாளையத்துக்கு வந்தார் மார்க்சிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் ஜி.ராமகிருஷ்ணன். அவரிடம் பேசியபோது, ‘‘முழுக்க முழுக்கக் கந்துவட்டி கும்பலோடு கைகோத்து நடக்கும் போலீஸாரின் அலட்சியத்தால், இந்தக் கொலை நடந்திருக்கிறது. வெறும் சஸ்பெண்ட் நடவடிக்கை போதாது. சி.பி.சி.ஐ.டி. விசாரணை நடத்தி போலீஸாரையும், குற்றவாளிகளையும் தண்டிக்கவேண்டும். மேலும், இந்தப் பகுதியில் கோலோச்சி வரும் கந்துவட்டிக்காரர்கள் அனைவரையும் கைது செய்யவேண்டும். அதுவரை எங்கள் போராட்டம் ஓயாது’’ என சூளுரைத்தார்.

இந்நிலையில் மார்ச் 16-ம் தேதி இந்த வழக்கை சி.பி.சி.ஐ.டி. விசாரணைக்கு மாற்றி உத்தரவிட்டுள்ளது தமிழக அரசு.

கந்துவட்டி என்ற குற்றத்தை செய்வதற்காகவே ஆபாசப்படம், கொலை என மேலும் பல குற்றங்களை சுதந்தரமாக செய்யும் கும்பலை முழுமையாக ஒடுக்குமா அரசு?

Advertisements

2 Responses to பள்ளிப்பாளையம் கந்துவட்டிக் கும்பல் கடன் வாங்கிய பெண்ணை ஆபாச செக்ஸ் சி.டி எடுத்து பரப்பியுள்ளனர்.

 1. Pavitra says:

  பள்ளிப்பாளையத்தில் பயங்கரம்: கம்யூனிஸ் பிரமுகர் வெட்டிக் கொலை; ஆபாசபடம் எடுத்த கந்துவட்டி கும்பலை போலீசில் காட்டி கொடுத்ததால் ஆத்திரம்
  நாமக்கல் மாவட்டம் பள்ளிப்பாளையம் அக்ரகாரம் பகுதியை சேர்ந்தவர் வேலுசாமி (வயது37), இவர் இந்த பகுதியின் மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு கட்சியின் கிளை செயலாளராக இருந்து வந்தார்.

  தொழிலாளர்கள் நிறைந்த இந்த பகுதியில் இவர் அவர்களுக்கு தேவையான உதவிகளை செய்து வந்தார். இதனால் இவர் இந்த பகுதியில் மிகவும் பிரபலமானார்.

  வேலுசாமி நேற்று இரவு சுமார் 11 மணியளவில் தனது மொபட்டில் பள்ளிப்பாளையத்தில் இருந்து அக்ரகாரத்தில் உள்ள தனது வீட்டிற்கு வந்து கொண்டு இருந்தார்.

  ராஜவீதி அருகே வந்த போது இருட்டில் பதுங்கி இருந்த 5 பேர் கொண்ட கும்பல் திடீரென அவரை வழிமறித்தது. பின்னர் கண் இமைக்கும் நேரத்தில் அவரை அந்த கும்பல் வீச்சரிவாளால் சரமாரியாக வெட்டியது. இதில் வேலுசாமி சம்பவ இடத்திலேயே இறந்து விட்டார்.

  வேலுசாமி இறந்ததை உறுதி செய்து கொண்ட அந்த கும்பல் அங்கிருந்து தப்பி ஓடியது.இரவு 11 மணி என்பதால் கூட்டம் குறைந்து காணப்பட்டது. ஆனால் ஆட்கள் நடமாட்டம் இருந்துள்ளது.

  இந்த கொலையை பார்த்த மக்கள் ஓட்டம் பிடித்தனர். திறந்து வைத்திருந்த கடைகள் அனைத்தும் அவசர அவசரமாக மூடப்பட்டது. பின்னர் இது குறித்து அங்கிருந்தவர்கள் போலீசுக்கு தகவல் கொடுத்தனர்.

  போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து வேலுசாமியின் உடலை பார்வையிட்டனர். அப்போது அவரின் தலை, கழுத்து, கை, கால், நெஞ்சு என உடல் முழுவதும் 12 இடங்களில் அரிவாளால் வெட்டப்பட்டு இருந்தது தெரியவந்தது. மேலும் போலீசார் நடத்திய விசாரணையில் வேலுசாமியை நீண்ட நாட்களாக நோட்டமிட்டு கும்பல் கொலை செய்து இருப்பது தெரியவந்தது.

  மேலும் கொலை செய்யப்பட்ட வேலுசாமி கடந்த சில நாட்களுக்கு முன்பு பள்ளிப்பாளையம் பகுதியில் கந்துவட்டி கும்பலை சேர்ந்த சிலர் பணத்தை திருப்பி செலுத்த முடியாத ஒரு பெண்ணை கற்பழித்து அதை வீடியோவில் பதிவு செய்து இண்டர்நெட், செல்போனில் பரவ விட்டுள்ளனர் என்று புகார் செய்தார்.

  அதன் அடிப்படையில் போலீசார் பள்ளிப்பாளையம் பகுதியில் நடத்திய சோதனையில் ஏராளமான ஆபாச சி.டி.க்கள் மற்றும் செல்போன் மெமரி கார்டுகளை பறிமுதல் செய்தனர். எனவே அந்த கும்பலை சேர்ந்தவர்கள் இவரை கொலை செய்து இருக்கலாம் என்ற கோணத்தில் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

  கொலை செய்யப்பட்ட வேலுசாமியின் உடல் ஈரோடு அரசு ஆஸ்பத்திரியில் பிரேதபரிசோதனைக்காக வைக்கப்பட்டுள்ளது.

  கொலை செய்யப்பட்ட வேலுசாமிக்கு சித்ரா என்ற மனைவியும் 2 மகன்கள், ஒரு மகளும் உள்ளனர்.கணவன்-மனைவி இருவரும் கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்து வாழ்ந்து வந்தனர்.

  வேலுசாமி கொலை செய்யப்பட்டதை அடுத்து பள்ளிப்பாளையம் அக்ரகாரம், ஆவத்திபாளையம் பகுதியில் உள்ள சுமார் 150 தறிபட்டறைகள் அடைக்கப் பட்டுள்ளது.

  வேலுசாமி கொலை செய்யப்பட்ட தகவலை அறிந்ததும் பள்ளிப்பாளையம் மற்றும் ஈரோடு அரசு ஆஸ்பத்திரியில் ஏராளமான தொண்டர்கள் குவிந்தனர். இதனால் அங்கு பரபரப்பு நிலவி வருகிறது.

  பாதுகாப்புக்காக பள்ளிப்பாளையம் பகுதியில் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. கொலையாளிகளை போலீசார் தனிப்படை அமைத்து தேடிவருகிறார்கள்.

  Source & Thanks : maalaimalar.
  http://www.viraivu.com/2010/03/11/3062/

 2. Pavitra says:

  கழுத்தை இறுக்கும் கந்துவட்டிக் கொள்ளை
  ப.கவிதா குமார் திங்கள், 24 மே 2010 09:47
  சமீபத்தில் நாமக்கல் மாவட்டம் பள்ளிப்பாளையம் பகுதியில் சில ஆயிரம் ரூபாய் கடன் வாங்கிய பெண்ணைப் பாலியல் பலாத்காரம் செய்து அதை செல்போனில் படம் எடுத்து இணையதளத்தில் வெளியிட்ட கொடூரன்களின் செயலைக் கண்டித்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் கிளைச்செயலாளர் வேலுச்சாமி கொடூரமாகக் கொல்லப்பட்டது பெரும் அதிர்ச்சி அலைகளை உருவாக்கியுள்ள நிலையில் பள்ளிப்பாளையத்தில் கந்துவட்டி ஒழிப்பு மாநாடு மே-23ந் தேதி நடைபெற்றது.

  தமிழகத்தில் வராக்கடன் அதிகரிப்பு

  விவசாயம் செய்ய, வீட்டுக்கடன், தனிநபர்கடன், சிறுதொழில் கடன் என 9 கோடி பேருக்குத்தான் இந்தியாவில் தேசவுடமையாக்கப்பட்ட வங்கிகளில் கடன் கிடைக்கிறது. கடந்த 2006-ஆம் ஆண்டில் வங்கிகளின் கடன் வசதி பெற்றவர்களில் 93 சதவீதம் பேர் தலா 2 லட்சம் மற்றும் அதற்குக் குறைவான அளவு கடன் பெற்றுள்ளனர். இது மொத்த வங்கிக்கடனில் 18 சதவிகிதம் தான். நூறு கோடி பேர் உள்ள நாட்டில் வெறும் 9 கோடி பேருக்கு வழங்கப்பட்ட கடன் தொகை என்பது கிராமப்புறங்களில் வெகுவாக குறைந்து வருகிறது. கடந்த ஐந்து ஆண்டுகளில் கிராமங்கள் மற்றும் ஊரகப்பகுதிகளில் வழங்கிய கடனுதவி 10.4 சதவீதத்தில் இருந்து 8.3 சதவீதமாகக் குறைந்து விட்டது. வசதிபடைத்தவர்களுக்கு முன்னுரிமை தந்து கடன் வழங்கும் வங்கிகள், கஷ்டப்படுவர்களைக் கண்டுகொள்வதில்லை. இந்த நிலையில் தமிழகத்தில் கடந்த 2007 செப்டம்பர் வரை 225 நிறுவனங்கள் தங்கள் வங்கி கணக்கின் வழியாக 1,600 கோடி ரூபாய் வராக்கடனாக நிலுவையில் வைத்துள்ளன. 365 நிறுவனங்கள், வழக்கு காரணமாக 2,300 கோடி ரூபாயை வங்கிக்குச் செலுத்தாமல், வராக்கடனாக நிலுவையில் வைத்துள்ளன.

  யெச்சூரி வேண்டுகோள்

  மழைபெய்யாததாலும், மலட்டு விதையாலும் போட்ட முதல் எடுக்கமுடியாமல் தற்கொலைப் பள்ளத்தாக்கில் விழுந்து உயிரை மாய்க்கும் விவசாயிகளின் சாவுக்குப் பின் கட்டாயம் கந்துவட்டிக் கடைக்காரர்கள் இருக்கிறார்கள் என்பது மறுக்கமுடியாத உண்மையாகும். ஏனெனில் கந்துவட்டிக் கடைகள் என்பது தேசம் முழுவதும் நீக்கமற நிறைந்திருந்திருக்கின்றன. விவசாயிகளின் கந்துவட்டிக் கடனை அடைக்க கடந்த 2004 ஆம் ஆண்டில் மத்திய அரசு ஒரு திட்டத்தை கொண்டு வந்தது. அந்தத் திட்டத்தின்படி, குறிப்பிட்ட காலத்தில் விவசாயிக்கு எவ்வளவு விவசாயக் கடன் தேவையோ அதில் 20 சதவீதம் அல்லது ரூ.50 ஆயிரம் இதில் எது குறைவோ அந்தத் தொகைதான் கடனாகக் கிடைக்கும். மேலும் அதற்கு ஈடான நிலம் விவசாயி கையில் இருக்க வேண்டும். இந்த நிபந்தனைகளினால் அந்தத் திட்டம் வெற்றி பெறவில்லை. இதன் காரணமாகத்தான் ஏராளமான விவசாயிகள் தற்கொலை செய்து கொண்டனர். விவசாயிகள் மட்டுமின்றி தமிழகத்தில் விசைத்தறி தொழிலாளி, கைத்தறி தொழிலாளி, நகைபட்டறை தொழிலாளி ஏராளமானோர் கந்துவட்டிக் கும்பலில் பிடியில் சிக்கியுள்ளனர்.

  இதுகுறித்து மாநிலங்களவையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் உறுப்பினர் சீத்தராம் யெச்சூரி குறிப்பிட்டதைப் பதிவு செய்வது அவசியமாகும். “தேசியமயமாக்கப்பட்ட வங்கிகள், கூட்டுறவு வங்கிகள், அரசாங்க நிதி நிறுவனங்களிடமிருந்து பெறப்பட்டுள்ள கடன்கள்தான் தள்ளுபடி செய்யப்பட்டிருக்கின்றன. இவ்வாறு கடன்பெற்றிருக்கும் விவசாயிகள், மொத்த விவசாயிகளில் மூன்றில் ஒரு பங்கினர் ஆவார்கள். ஆனால் மூன்றில் இரு பங்கு விவசாயிகள் தனியாரிடமும் மற்றும் கந்து வட்டிக்காரர்களிடமும் வட்டிக்குக் கடன் பெற்று அதை மீண்டும் அளிக்க முடியாமல் செத்துக்கொண்டிருப்பவர்களாவார்கள். தற்கொலை செய்து கொள்ளும் விவசாயிகளில் இவர்கள்தான் கணிசமானவர்கள். அவ்வாறு தனியாரிடம் கடன் பெற்றவர்கள் குறித்து நிதிநிலை அறிக்கையில் கண்டுகொள்ளப்படவே இல்லை. இவர்களை கந்துவட்டிக்காரர்களிடமிருந்து மீட்க வேண்டியது அவசியமாகும்” என்று குறிப்பிட்டார்.

  1.66 லட்சம் விவசாயிகள் தற்கொலை

  ஏனெனில் தற்கொலை செய்து கொண்ட விவசாயிகள் பட்டியலைப் பார்த்தால் அந்த உண்மை விளங்கும். கடந்த 10 ஆண்டுகளில் தற்கொலை செய்து கொண்டு மாண்ட விவசாயிகளின் எண்ணிக்கை 1 லட்சத்து 66 ஆயிரத்து 304 ஆக உயர்ந்துள்ளது என்ற தகவலை தேசியக் குற்றப் பதிவு வாரியம் பதிவு செய்துள்ளது. இதே போல, தமிழகக் காவல்துறையும் ஒரு கணக்கைச் சொல்கிறது. கடந்த 2004 ஆம் ஆண்டு முதல் 2008 வரையிலான ஐந்து ஆண்டு கணக்குப்படி 65 ஆயிரத்து 532 பேர் தமிழகத்தில் தற்கொலை செய்திருக்கிறார்கள்.

  தமிழகத்தில் சுயஉதவிக்குழுக்களையும் கந்துவட்டிக்கும்பல் விட்டு வைக்கவில்லை. மதுரையில் சில பெரிய நிறுவனங்கள் அலுவலகங்கள் அமைத்து கந்து வட்டி தொழிலை துவக்கி உள்ளன. இவர்களிடம் வட்டிக்கு வாங்கி, பணம் செலுத்தாதவர்கள் தாலியை விற்றுக் கூட கடனை அடைக்கும் நிலைக்கு பலர் தள்ளப்படுகின்றனர். சிலர் பாலியல் ரீதியான சித்திரவதைக்கும் ஆளாகின்றனர் என்ற செய்தி அதிர்ச்சிக்குள்ளாக்குகிறது.

  தமிழகத்தில் உள்ள சுயஉதவிக்குழுக்கள் மூலம் கிராமப்புறங்களில் கந்துவட்டிக்கொடுமை ஒரளவேனும் ஒழிக்கப்பட்டுள்ளது. ஆனால், இக்குழுக்களுக்கு கடன்வழங்குவதில் வங்கிகள் தொடர்ந்து சுணக்கம் காட்டிவருகின்றன.

  திருப்பூரில் ஞாயிற்றுக்கிழமைகளிலும், மங்கலம் பகுதியில் புதன்கிழமையும், சோமனூர் சுற்றுப்பகுதிகளில் வியாழக்கிழமையும் கந்து வட்டி வசூல் நாளாக பின்பற்றப்படுகிறது. நெல்லை மாவட்டம் ஆலங்குளம் அருகே உள்ளது பூலாங்குளம். சமீபகாலமாக இந்த ஊரில் கந்து வட்டிக் கொடுமை அதிகரித்து வருகிறது. இங்கு விவசாயம் மற்றும் கூலி வேலை செய்வோர் அதிகம் உள்ளனர். குடும்ப செலவிற்காக பிறரிடம் இவர்கள் சிறிதளவு பணம் வாங்குகின்றனர். கடன் கொடுத்தவர்கள் வாங்கிய கடனுக்கு வட்டி மேல் வட்டி போட்டு கந்து வட்டி வசூலித்து வருகின்றனர். வீட்டுப் பத்திரம் மற்றும் நகை போன்றவற்றை அடமானமாகப் பெற்றுத்தான் இந்த கும்பல் கடன் கொடுக்கிறார்கள். சிறிய தொகையை கொடுத்து விட்டு நீங்கள் வாங்கிய கடன் வட்டியுடன் சேர்த்து வீட்டு மதிப்பை விட அதிகமாகி விட்டது என்கிறார்கள். நெய்வேலியில் கந்துவட்டிக்கு கொடுத்த பணத்தை மனிதநேயமின்றி வசூல் செய்யும் கும்பலால், அப்பாவி என்.எல்.சி., தொழிலாளர்கள் தற்கொலை முடிவைத் தேடும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.

  தினமும் வட்டிப்பணம் ரூ.20 கோடி

  மதுரை, புதுக்கோட்டை, திருச்சி, அறந்தாங்கி உள்ளிட்ட பகுதிகளைச் சேர்ந்த கந்துவட்டி பைனான்சியர்கள், கோவை நகரில் ராமநாதபுரம், காந்திபுரம், பீளமேடு, ஆர்.எஸ்.புரத்தில் அதிகளவில் முகாமிட்டுள்ளனர். இவர்கள், தொழில் மற்றும் வர்த்தக நிறுவனங்கள், வியாபார கடைகளுக்கு தின வசூல் அடிப்படையில் 10 ஆயிரம் ரூபாய் முதல் 10 லட்சம் ரூபாய் வரை கடன் வழங்குகின்றனர். வழங்கும்போதே 15 சதவீத தொகையை வட்டிப்பணமாக பிடித்தம் செய்து கொள்கின்றனர். கடனாளி, 10 ஆயிரம் ரூபாய் கடன் பெற்றிருந்தால் தினமும் 100 ரூபாய் வீதம், 100 நாட்களில் செலுத்தி முடிக்க வேண்டும். இல்லாவிடில், நாள் வட்டி அடிப்படையில், வட்டித்தொகை எகிறிக்கொண்டே போகும். அதன் பின், அடியாட்களை அனுப்பி வசூலித்து விடுவர். இவ்வகை பைனான்சியர்கள் ஒவ்வொருவரிடமும் பணம் வசூல் செய்ய பலர் வேலை செய்கின்றனர். பல ஆயிரம் ரூபாய் முதல் லட்சக்கணக்கில் கடன் பெற்றுள்ளனர். இவ்வாறான கடனளிப்பு முறையில் கந்துவட்டிப் பணம் நகரில் தினமும் 20 கோடி ரூபாய்க்கும் அதிகமாகப் புழங்குவதாக, வியாபாரிகள் தெரிவிக்கின்றனர்.

  தமிழ் திரையுலகில் தற்போது பல தயாரிப்பு நிறுவனங்கள் கந்துவட்டிக்காரர்கள் மூலம் இயங்குவது தெரிந்த விஷயமாகும். ஒரு படத்தைத் தயாரித்த பிரபல கம்பெனியின் பெயரில் படங்களை வெளியிடுவது தற்போது பேசனாகி விட்டது. தற்போது மதுரையை மையமாகக் கொண்டு பல படங்கள் வெளிவந்து கொண்டிருக்கின்றன. ஒரு படத்திற்கு 1.50 கோடி ரூபாயை முதலீடு செய்யும் கந்துவட்டிக்காரர்கள், படம் வெளியிடுவதற்கு முன்பே, பாடல்களை, காட்சிகளை தொலைக்காட்சிகள், எப்.எம் ரேடியோக்களுக்கு நல்ல விலைக்கு விற்றுவிடுகிறார்கள். தாங்கள் போட்ட முதலில் முக்கால்வாசி பணத்தை இப்படி எடுத்துக்கொள்ளும் வட்டிக்காரர்கள், படம் வெளியானதும் பத்துநாட்களில் மொத்தப் பணத்தையும் வட்டியோடு எடுத்து விடுகிறார்கள். மதுரை மட்டுமின்றி தென்மாவட்டங்களில் பல கந்துவட்டிக்காரர்கள் தற்போது படத்தயாரிப்பில் குதித்துள்ளனர்.

  பயத்தால் குறையும் புகார்கள்

  கந்துவட்டிக்கும்பல் குறித்து புகார் கொடுத்தால் நடவடிக்கை எடுக்கவில்லை என்பதற்கு நல்ல உதாரணம் பள்ளிப்பாளையம் வேலுச்சாமி படுகொலையே சாட்சியாக இருக்கிறது. கந்துவட்டிக்கும்பலால் தனது உயிருக்கு ஆபத்து என 2 முறை பள்ளிப்பாளையம் காவல்நிலையத்தில் அவர் புகார் கொடுத்தும் நடவடிக்கை எடுக்காத நிலையில், வேலுச்சாமி அதே கும்பலால் கொல்லப்படுகிறார். கந்துவட்டி குறித்து புகார் கூறினால் ஆபத்து என்பதால் பெரும்பாலும் யாரும் புகார் செய்வதில்லை என்பது பதிவு செய்யப்பட்ட புகார்களின் எண்ணிக்கையை வைத்தே கூறமுடியும். கந்துவட்டி சட்டம் கொண்டு வரப்பட்ட 2003-ஆம் ஆண்டு பதிவான வழக்குகள் எண்ணிக்கை 34. அதற்கு அடுத்த ஆண்டு 40 என்றும், 2005 ஆம் ஆண்டு 42 வழக்குகளும், 2006 ஆம் ஆண்டு 13 வழக்குகளும், 2007 ஆம் ஆண்டு 8 வழக்குகளும், 2008- 2 வழக்குகளும் பதிவு செய்யப்பட்டுள்ளன என்பது இங்கு குறிப்பிடப்பட வேண்டிய விஷயமாகும். .

  நெல்லை மாவட்டம் பாளையங்கோட்டை விஸ்வபிராமணாள் தெருவைச் சேர்ந்த நகைத் தொழிலாளி உள்ளிட்ட 6 பேரின் தற்கொலை துவங்கி நாகர்கோவில், மதுரை, ஈரோடு, பெருந்துறை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் நடைபெற்ற தற்கொலைகள் கந்துவட்டிக்கொடுமையால் தொடர்கதையாகி உள்ளது.

  வேலையில்லா இளைஞர்களை சமூகவிரோதச் செயல்களில் ஈடுபடுத்தும் கூட்டம் ஒருபுறமும், ரன்வட்டி, மீட்டர்வட்டி, ஸ்பீடு வட்டி எனப் பெயர் கொண்டு வசூலிக்கப்படும் கந்துவட்டிக் கும்பலிடம் பணத்தைக் கடனாக வாங்கி வெளிநாட்டுக் கனவுகளுடன் பயணித்து கடல்கடந்து கொத்தடிமையாய் சிக்கிக்கொண்டும் அவதிப்படும் கூட்டம் ஒருபுறமும், விற்கும் விலைவாசிக்கு வாழவழியற்று கடன் வாங்கி சிக்கி இருக்கும் வீடுகளை இழக்கும் கூட்டம் ஒருபுறமும், கடன்வாங்கி மானத்திற்குப் பயந்து மாண்டு போகும் கூட்டம் ஒருபுறம் இருக்க தொலைக்காட்சியில் இருந்து விளம்பரம் வருகிறது “சிரிச்சிக்கிட்டே இருங்க”. இக்கொடுமைகளை இன்னமும் எத்தனை நாள் சகித்துக்கொண்டு இருக்கப்போகிறோம்?

  – ப.கவிதா குமார் ( kavithamukil@rediffmail.com)
  http://www.keetru.com/index.php?option=com_content&view=article&id=8879:2010-05-24-04-19-40&catid=901:2009-08-16-09-44-24&Itemid=139

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s

வரலாற்று உண்மைகளை அலசுவோமே

வரலாற்று உண்மைகளை அலசுவோமே

வரலாற்று உண்மைகளை அலசுவோமே

Dwindling In Unbelief

வரலாற்று உண்மைகளை அலசுவோமே

Larry Hurtado's Blog

Comments on the New Testament and Early Christianity (and related matters)

TaborBlog

Religion Matters from the Bible to the Modern World

தமிழன்

வரலாற்று உண்மைகளை அலசுவோமே

வரலாற்று உண்மைகளை அலசுவோமே

இறையில்லா இஸ்லாம்

வரலாற்று உண்மைகளை அலசுவோமே

Devapriyaji - True History Analaysed

வரலாற்று உண்மைகளை அலசுவோமே

வரலாற்று உண்மைகளை அலசுவோமே

கிறிஸ்தவம் பலானது

உண்மைகளை அறிவோம் தீமைகளை விரட்டுவோம்

World Watch- Devapriyaji

வரலாற்று உண்மைகளை அலசுவோமே

%d bloggers like this: