ஏசு பிறப்பு: புராணமா? வரலாறா? குறிக்கோளுடன் உருவாக்கப்பட்ட கதையா?

ஏசுவின் பிறப்பு முழுக்க முழுக்க பல்வேறு புராண கதம்பங்களால் ஆனது. அன்றைய ரோம சமுதாயத்தில் நிலவிய பல்வேறு பிரபல தொன்ம நாயகர்களின் பிறப்பு குறித்த அதீத நம்பிக்கைகள் ஏசுவுக்கு வழங்கப்பட்டன. மார்க்கு எழுதிய ஏசு காதையில் அவரது பிறப்பு விசேசமான செய்தியாக குறிப்பிடப்படவில்லை. யோவான் எழுதிய ஏசு கதையிலோ அவரது பிறப்பு தத்துவ அம்சங்களுடன் இணைத்து கூறப்பட்டாலும் கன்னியில் உதயமாகுதல், விண்மீன் முன்னறிவிப்பு, குழந்தைகள் கொலை போன்ற விசயங்கள் இல்லை. ஆக மத்தேயு, லூக்கா ஆகிய இருவர் எழுதிய ஏசு கதைகளிலேயே இந்த அம்சங்கள் விவரமாக எடுத்துரைக்கப்படுகின்றன. இயேசு காதையின் தொடக்ககால கட்டத்தில் அவரது பிறப்பு ஓரு முக்கிய விசயமாக இருக்கவில்லை. மாறாக அவரது இறப்பு-உயிர்த்தெழுதல் ஆகியவையே ஏசு காதையின் தொடக்கத்தில் முக்கிய அம்சமாக இருந்தன. மெஸபடோ மிய பலி கொடுக்கப்பட்டு மீண்டெழும் தெய்வக்காதைகளே தொடக்க கால ஏசு காதையின் முக்கிய அம்சம். எனில் ஏன் இந்த விஸ்தீகரண ஏசு பிறப்புக் கதைகள்? இதற்கு முக்கிய காரணம், யூதர்களை ஏசுவே வாக்களிக்கப்பட்ட மெசையா என நம்ப வைப்பதோ அல்லது யூதத்தின் வாக்களிக்கப்பட்ட உலக மெசையா ஏசு என பிற மக்களை நம்ப வைக்கவுமே இந்த விஸ்தீகரண சித்தரிப்பு உருவாகியிருக்க வேண்டும்.

புராணமா? வரலாறா? குறிக்கோளுடன் உருவாக்கப்பட்ட கதையா?
ஏசு பிறந்த காலத்தின் வரலாற்று அடிப்படை:
இனி இந்த காதையின் சில முக்கிய கூறுகளின் நம்பகத்தன்மையை வரலாற்றின் அடிப்படையில் காணலாம். முன்னறிவிக்கப்பட்ட தெய்வீக நாயகனை வேட்டையாடும் தீய அரசன் எனும் தொன்ம அமைப்பு ஸ்டார்வார்ஸின் கதாநாயகர்களுக்கும் ஹாரி பாட்டருக்கும் வரை நீளக்கூடியது. மத்தேயு மற்றும் லூக்காவின் ஏசுகாதைகளே ஏசு பிறப்பினை விவரிக்கின்றன. இங்கே ஏசுவின் பிறப்பு என்ற உடனேயே நமக்கு முக்கியமாக நினைவுக்கு வருவது பெத்லகேமின் எல்லைக்குட்பட்ட இரண்டு வயதுக்குட்பட்ட எல்லா ஆண் குழந்தைகளையும் எரோது கொலை செய்வதுதான். (மத்தேயு 2:16) இது முழுக்க முழுக்க ஒரு புராண நிகழ்வு என்பதில் எவ்வித ஐயமும் இல்லை. இந்த நிகழ்வுக்கு எவ்வித வரலாற்று ஆதாரமும் இல்லை. எரோதின் மரணம் பொதுவாக வரலாற்றாசிரியர்களால் கிமு 4 ஆம் ஆண்டு என கருதப்படுகிறது. அடுத்ததாக லூக்காவின் ஏசு காதை மற்றொரு வரலாற்று நிகழ்வினை ஏசுவின் பிறப்பு காலத்துக்கு அடையாளமாக அளிக்கிறது அது: ‘சிரியா நாட்டில் சிரேனியு (census of Quirinius) என்பவன் தேசாதிபதியாக இருந்த போது இந்த முதலாம் குடிமதிப்பு உண்டாயிற்று.’ (லூக்கா 2:2) இந்த முதலாம் குடிமதிப்புக்கும் எரோதுவின் சாவுக்கும் பத்தாண்டு இடைவெளி உள்ளது. வரலாற்றறிஞர் ராபின் லேன் பாக்ஸ் (Robin Lane Fox)இது குறித்து விரிவாக பேசுகிறார். சிரேனியு சிரியாவின் அதிபனான காலம் குறித்து யூத வரலாற்றாசிரியர் ஜோஸப்பஸ் தெளிவாக கூறியுள்ளார். கிபி 6 ஆம் ஆண்டு எரோதின் மகன் அர்சிலஸ் பதவி இழந்த பின்னர் சிரேனியு சிரியா அதிபனாகிறான். இது நடப்பது எரோது அரசன் இறந்து பத்து ஆண்டுகளுக்கு பின்னர் நடந்த நிகழ்வாகும். சில கிறிஸ்தவ அறிஞர்கள் இந்த பிரச்சனையை சிரேனியு சிரியாவின் அதிபனாக இரண்டாம் முறை பதவியேற்றது குறித்த கல்வெட்டையும் கிமு 3 ஆம் ஆண்டு ரோம பேரரசன் ரோமானிய மக்கள் தொகை கணக்கெடுப்பு நடந்ததையும் முடிச்சு போட்டு லூக்கா 2:2 ஐ நியாயப்படுத்துவதுண்டு. ஆனால் அந்த கல்வெட்டு சிரேனியுவின் பெயரைக் குறிப்பிடவில்லை என்பதும் கிமு 3 ஆம் நூற்றாண்டு கணக்கெடுப்பு ரோமானிய குடிமக்கள் குறித்ததென்பதும் அது யூதர்களை உள்ளடக்கவில்லை என்பதும் இந்த தீர்வினை நியாயப்படுத்தவில்லை. எனில் இந்த காதை ஏற்பட்டது ஏன்?
எகிப்தும் ஏசு பிறப்பும்:

எலைன் பேகல்ஸ் இதற்கு ஒரு நல்ல விளக்கத்தைக் கூறுகிறார். ஏசுவின் பிறப்பு காதை ஒரு முக்கிய யூத புராண நிகழ்வினை தலைகீழாக்கும் புனைவு ஆகும். மிக மோசமான யூத வெறுப்பியல் கிறிஸ்தவத்தில் உருவாவதற்கு கட்டியம் கூறிய புனைவு இது என்று கூட கூறலாம். பேகல்ஸின் வார்த்தைகளில் இதனை காணலாம்: ” மத்தேயுவின் ஏசு பிறப்பு புனைவொன்றும் கிறிஸ்துமஸ் வாழ்த்து அட்டை காட்டும் ஏகாந்த அழகு கதை அல்ல. மத்தேயுவின் கதைப்படி ஏசு நூலிழையில் மரணத்திலிருந்து தப்புகிறார். அதுவும் யூதக்குழந்தைகளை கூட்டம் கூட்டமாக கொல்ல உத்தரவிட்ட ஒரு கொலைவெறி பிடித்த கொடுங்கோல் அரசனின் கட்டளையிலிருந்து. பல விவிலியிய ஆராய்ச்சியாளர்கள் இதற்கும் மோசஸ் கதைக்கும் உள்ள இணைத்தன்மைகளை சுட்டிக்காட்டியுள்ளனர். மத்தேயு ஏசுவை ஒரு புதிய மோசஸாக காட்ட முனைந்துள்ளதை அவர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர். ஆனால் அவர்கள் யாருமே மத்தேயு (ஏசுவை புதிய மோசஸாக காட்டும் அதேநேரத்தில்) எப்படி மோசஸ் காதையின் பல அடிப்படை அம்சங்களை தலைகீழாக்கியுள்ளார் என்பதனை சுட்டிக்காட்டியதில்லை. அந்த காதையே பாஸ்கா பண்டிகைக்காக நினைவோர்க்கப்படும் மோசஸ் யூதர்களை எகிப்திலிருந்து விடுவித்து கொண்டு சென்ற கதையாகும். அதிர்ச்சிகரமாக எகிப்திய சர்வாதிகாரியின் இடத்தில் மத்தேயு வைப்பது யூத அரசனான எரோதுவை ஆகும். இங்கு எரோதுவே -எகிப்திய பாரோ அல்ல-யூத குழந்தைகளை கூட்டம் கூட்டமாக கொல்ல ஆணையிடுகிறான். மத்தேயுவின் வார்த்தைகளில் ஏசு பிறந்ததுமே எரோது அரசன் ‘பிரதான ஆச்சாரியர் ஜனத்தின் வேதபராகர் எல்லோரையும்’ (மத்தேயு 2:4) அழைத்து ‘கிறிஸ்து’ எங்கே பிறப்பார் என விசாரிக்கிறான். பின்னர் குழந்தையை தேடி கொல்ல உத்தரவிடுகிறான். இதனைத் தொடர்ந்தே ஏசுவின் குடும்பம் எகிப்திற்கு தப்பி செல்கிறது. ஆக எந்த எகிப்து தேசம் பாஸ்கா கொண்டாட்டத்தில் அடிமைத்தனத்தின் குறியீடு ஆகிறதோ அதே எகிப்து கிறிஸ்து பிறப்பில் கொடுமையிலிருந்து தப்பி சென்றடையும் தேசமாக மாறுகிறது. மற்றொரு விசயத்தையும் நாம் கவனித்திட வேண்டும் என மத்தேயு விரும்புகிறார். (யூதனான) எரோதுவும் அவனது சபையினரும் ஏசுவை கொல்ல முயலுகிற போது புறச்சாதி (Gentile) ஞானிகள் (மாஹி) -பின்னாள் கிறிஸ்தவ ஐதீகத்தில் கிழக்கு தேசத்தின் மூன்று ராஜாக்கள்- அவரை வழிபட வருகின்றனர்…” இந்த தொன்ம புனைவு நோக்கங்களை குறிப்பிடும் எலைன் பேகல்ஸ் இந்த இரு (ஏசு பிறப்பு குறித்து கூறும்) ஏசுகாதைகளும் ஒட்டுமொத்தமாக இறுதியில் உருவாக்கும் மனபிம்பத்தை வெளிப்படுத்துகிறார், ” மத்தேயு உள்ளூட்டமாக யூத பெரும்பான்மையினரை சைத்தானுடன் இணைக்கிறார். லூக்கா அதனை வெளிப்படையாக செய்கிறார்.” (எலைன் பேகல்ஸ், ‘The Origin of Satan in Christian Tradition’ யுதா பல்கலைக்கழக உரை, மே 14 1997) மற்றொரு அம்சம் என்னவென்றால் ஏசுகாதைகள் கூறுவது போலல்லாமல், எரோதுவுக்கும் பரிசேயருக்குமான உறவு நல்லதாக இருக்கவில்லை. இவர்களை கிறிஸ்தவ விவிலியம் சித்தரிக்கும் எதிர்மறை தன்மைக்கான காரணங்களை பின்னால் காணலாம். மேலும் எரோது தொடர்ந்து தன் மைந்தர்களை தனக்கு எதிராக சதி செய்வதாக கருதி வந்ததுடன் தனது சொந்த மகனையே கொலைத்தண்டனை அளித்து கொன்றான். எனவே இது குறித்து பரவிய கதைகளின் தாக்கமும் கிறிஸ்தவ விவிலியத்தில் உள்ளது.

கீழ்திசை மாகியும், வழிகாட்டிய விண்மீனும்: வரலாறா? புனைவா?
வழிகாட்டிய விண்மீன்?:
ஏசுவின் பிறப்பில் மற்றொரு முக்கிய அம்சம் அவரது பிறப்பினை அறிவித்த விண்மீன் ஆகும். மத்தேயு இது குறித்து பின்வருமாறு கூறுகிறார்:”எரோது ராஜாவின் நாட்களில் யூதேயாவிலுள்ள பெத்லகேமில் இயேசு பிறந்த பொழுது, கிழக்கிலிருந்து சாஸ்திரிகள் எருசலேமுக்கு வந்து யூதருக்கு ராஜாவாகப் பிறந்திருக்கிறவர் எங்கே? கிழக்கிலே அவரது நட்சத்திரத்தைக் கண்டு அவரைப் பணிந்து கொள்ள வந்தோம் என்றார்கள்.” (மத்தேயு 2:1-2) பின்னர் “ராஜா சொன்னதை அவர்கள் கேட்டுக்கொண்டு போகையில் இதோ, அவர்கள் கிழக்கிலே கண்ட நட்சத்திரம் பிள்ளை இருந்த ஸ்தலத்திற்கு மேல்வந்து நிற்கும்வரைக்கும் அவர்கள் முன் சென்றது. அவர்கள் அந்த நட்சத்திரத்தைக் கண்டபோது மிகுந்த ஆனந்த சந்தோஷமடைந்தார்கள்.” (மத்தேயு 2:9-10) பல வானவியல் மற்றும் வரலாற்று அறிஞர்கள் இந்த விண்மீன் எதுவாக இருக்கும் என்று ஊகம் செய்துள்ளார்கள். ஆனால் ஒரு திட்டவட்டமான முடிவுக்கு வர அவர்களால் இயலவில்லை. கிறிஸ்தவ விவிலியத்தின் மத்தேயு கதை கூறுவது போல ஒரு விண்மீன் (அது வால் நட்சத்திரமாக இருந்தாலும் கூட) அது நகர்ந்து ஒரு குறிப்பிட்ட வீட்டின் முன்னால் நிற்பதென்பது நடவாத காரியம். என்றாலும் ஏசு பிறந்ததாக நம்பப்படும் காலகட்டத்தில் ஏதேனும் விண்மீன் தோன்றியிருக்கலாமா எனும் கேள்வி வரலாற்றாசிரியர்களாலும் வானவியலாளர்களாலும் கேட்கப்பட்டு ஆராய்ச்சி செய்யப்பட்டு வந்துள்ளது. மீண்டும் ஏசுவின் வாழ்க்கைக்கு எப்படி கிறிஸ்தவ விவிலியத்துக்கு வெளியே ஐயந்திரிபற்ற ஆதாரம் கிட்டவில்லையோ அது போலவே இந்த விண்மீனுக்கும் எவ்வித ஆதாரமும் கிட்டவில்லை. ஆனால் 2001 டிசம்பரில் ஒரு வானவியலாளரின் ஆராய்ச்சி வெளிவந்தது. மைக்கேல் மோல்னர் ரோம சோதிடத்தில் மேஷ ராசியில் (ரோம சோதிடத்தில் மேஷராசி யூதேயாவைக் குறிப்பது.) ஒரு நட்சத்திரம் தோன்றுகிற காலத்தினைக் குறித்து கூறுகிறார். இந்த நட்சத்திரம் உண்மையில் வியாழன் (jupiter) ஆகும். இது ரோம சோதிடத்தில் அரசனைக் குறிக்கும் நட்சத்திரமாகும். குறிப்பாக ஒரு பேரரசனின் பிறப்பு அல்லது பட்டமேற்பினை இது காட்டுவதாகும். ஆனால் இது ரோம சோதிடத்தின் அடிப்படையில் எழுந்ததாகும். அக்கால யூத மக்கள் இதனை பெரிய விசயமாக எடுத்துக்கொள்ளவில்லை மேலும் யூத குருமார்கள் ரோம சோதிடத்தை தேவனுக்கு ஆகாததென வெறுத்தொதுக்கினர். ஆனால் பிற்காலத்தில் (கிபி 3 ஆம் நூற்றாண்டுகளில்) சோதிட நம்பிக்கையுள்ள ரோமானியர்கள் மத்தியில் கிறிஸ்தவம் பரப்பப்பட்ட போது இந்த குறிப்பிட்ட சோதிட-கிரக நிலை (வானவியல் நிகழ்வல்ல) ஏசுவின் பிறப்புடன் இணைக்கப்பட்டது. அந்நாளில் பிரபல ரோம சோதிடக்காரனாகவும் கிறிஸ்தவத்தை தழுவியவராகவும் இருந்த ப்ர்மிக்கஸ் மாட்டர்னஸ் (Firmicus Maternus) என்பவர் கிபி 334 இல் ஒரு சோதிட நூலை எழுதினார். இந்நூலில் இந்த குறிப்பிட்ட (மேஷராசியில் வியாழன்) கிரகநிலையைக் குறிப்பிட்டு அது ஒரு இறப்பற்ற அரசனின் பிறப்பைக் குறித்ததாக கூறுகிறார். அக்காலத்தில் சோதிடம் ரோமானிய மக்களிடம் பெரும் ஆர்வமுடைய விசயமாக இருந்தது. அதே நேரத்தில் ஏசு குறித்த காதைகளும் பரவிக்கொண்டிருந்தன. இந்நிலையில் இந்த மட்டர்னஸின் இந்த கூற்று அவர் பெயரைக் குறிப்பிடாமல் கூறினாலும் அது ஏசுவைக் குறிப்பதென மக்கள் எடுத்துக்கொள்வார்கள் என்பதனை மாட்டர்னஸ் அறிவார். அதே நேரத்தில் அவர் ஏன் ஏசுவை பெயர் சொல்லி குறிப்பிடவில்லை. மோல்னர் கூறுகிறார்:” கிறிஸ்தவத்தை தழுவிய ஒரு பாகனாக (pagan) ப்ர்மிக்கஸ் இரு உலகுகளுக்கும் இடையே இழுக்கப்பட்டு துன்பப்பட்டார். எனவேதான் சோதிடத்தின் மூலம் ஒரு திரை மூடிய விதத்தில் ஏசு கதையை வலுப்படுத்தினார்.” (மார்கஸ் சௌன், ‘Early Christians hid the origins of the Bethlehem star’, நியூ சயின்டிஸ்ட் டிசம்பர் 2001) சோதிடத்தையும் ஏசுவின் பிறப்பையும் இணைக்கும் பெத்லகேம் விண்மீனின் உண்மைத்தன்மை தொடக்ககால நிறுவன கிறிஸ்தவத்திற்கு தேவையற்ற இறையியல் பிரச்சனைகளை உருவாக்கிவிடலாம் என்பதால் பெத்லகேம் நட்சத்திரத்தின் இந்த உண்மைநிலை கிறிஸ்தவ நிறுவன சபையால் விரைவில் மழுங்கடிக்கப்பட்டு மறக்கப்பட்டது இத்தகைய சோதிட நிலைப்பாடு கிமு மத்தேயுவின் நட்சத்திரம் ஆக உண்மையில் பின்னாளில் கிறிஸ்தவத்தாலும் அந்நாளில் யூதத்தாலும் வெறுத்தொதுக்கப்பட்ட சோதிடத்தின் அடிப்படையில் உருவானது என்பது உண்மையிலேயே ஒரு முரண் நகைதான். எண்ணாகமத்தில் உள்ள ஒரு வாசகத்துடன் இந்த நட்சத்திரம் பின்னர் இணைக்கப்பட்டது. (“…ஒரு நட்சத்திரம் யாக்கோபிலிருந்து உதிக்கும்; ஒரு செங்கோல் இஸ்ரவேலிலிருந்து எழும்பும்..” -[எண்ணாகமம் 24:17] யூத அறிஞர்கள் இந்த வார்த்தைகளை முழுக்க முழுக்க வேறுவிதமாக அறிந்துகொள்கிறார்கள் என்பதுடன் எண்ணாகமம் யூத மறைநூலே அன்றி கிறிஸ்தவ நூல் அல்ல என்பதையும் நினைவுகொள்ள வேண்டும்.)
கன்னித்தாயும் யூத முன்னறிவிப்பும்:

அடுத்ததாக கிறிஸ்து பிறப்பு கதையின் முக்கிய அம்சம் ஏசுவின் கன்னி பிறப்பாகும். ஏசுவினை ஒரு வரலாற்றில் வாழ்ந்த மனிதராகவே எடுத்துக்கொண்டு பார்த்தால் அப்போஸ்தலன் பவுல் ஏசுவின் சகோதரன் என கருதப்படும் ஜேம்ஸை அறிந்திருந்தவர் ஆவார். அவருக்கு இந்த கன்னி மூலமான ஏசு பிறப்பு குறித்து எவ்வித அறிவும் இருக்கவில்லை என்பது மட்டுமல்ல ஏசு தாவீதின் வம்சத்தில் மாமிசத்தின்படி பிறந்ததாக (பவுல் அப்போஸ்தலன் ரோமபுரியாருக்கு எழுதின நிருபம் 1:5) கூறுவதோடு மட்டுமில்லாமல் பரிசுத்த ஆவியின் மூலம் ஏசு மரணத்துக்கு பின் உயிர்த்தெழுந்ததைக் குறிப்பிடுகிறார். ஆக ஏசு கன்னி மூலம் பிறந்த கதைக்கான முக்கியத்துவம்தான் என்ன? அத்தகைய புனைவுக்கான காரணமாக எது இருந்திருக்க கூடும்? பொதுவாக கிறிஸ்தவ மதப்பரப்பு இலக்கியங்களில் கன்னி மூலம் ஒரு மகவைப் பெறுவது என்பதன் மூலம் ஏசுவின் பிறப்பு ஒரு குறிப்பிட்ட யூத முன்னறிவிப்பைப்பூர்த்தி செய்வதாகக் கூறப்படுகிறது. அந்த முன்னறிவிப்பாக முன் வைக்கப்படுவது பின்வரும் யூத விவிலிய வார்த்தைகள் ஆகும்: “ஆதலால் ஆண்டவர் தாமே உங்களுக்கு ஒரு அடையாளத்தைக் கொடுப்பார். இதோ ஒரு கன்னிகை கர்ப்பவதியாகி ஒரு குமாரனைப் பெறுவாள், அவருக்கு இம்மானுவேல் என பெயரிடுவாள்.”(ஏசாயா 7:14) இந்த முன்னறிவிப்பே ஏசு கன்னிமரியாள் மூலம் பிறந்ததன் மூலம் நிறைவேறிற்று என கிறிஸ்தவ பிரச்சாரம் கூறுகிறது, முன்பே கூறியது போல காலத்தால் முற்பட்ட கிறிஸ்தவ ஏசு கதையான மார்க்கில் இத்தகைய புனைவுகள் ஏதும் இல்லை. எனவே இது பின்னாளில் யூதர்கள் ஏசுவின் ‘வாக்களிக்கப்பட்ட’த்தன்மை குறித்த கிறிஸ்தவ பிரச்சாரத்தை எதிர்த்த போது உருவாக்கப் பட்டிருக்க வேண்டும். ஆனால் யூதர்கள் இந்த கிறிஸ்தவ புனைவே ஒரு தவறான மொழிப்பெயர்ப்பு புரிதலின் விளைவாக எழுந்தது எனக் கூறுகிறார்கள். இன்று நேற்றல்ல கிறிஸ்தவர்கள் எப்போது கன்னி பிறப்பையும் ஏசாயாவின் வார்த்தைகளையும் இணைத்து பிரச்சாரம் செய்ய தொடங்கினார்களோ அப்போதிருந்தே இந்த பிரச்சனையும் தொடங்கிவிட்டது. எபிரேயத்தில் பருவப்பெண் என்பதற்கான பதம் ‘அல்மா'(‘almah’) என்பதாகும். இது கிரேக்க மொழி பெயர்ப்பில் பர்தெனோஸ்(‘parthenos’) என மொழி பெயர்க்கப்பட்டது. இரண்டுமே மணம் புரியும் வயதடைந்த பருவப்பெண் எனும் பொருளுடையதென்றாலும் கன்னி என்பதற்கு மிக அருகில் வருவதாகும் (பின்னாளில் அப்பொருளையே அடைந்தும் விட்டது.) ஆனால் எபிரேயம் ஆண் தொடர்பறியாத கன்னி என்பதற்கு ஒரு தனி பதத்தினைக் கொண்டிருக்கிறது, அது ‘பெத்துலா’ (bethulah) என்பதாகும். கன்னி என்பதனை யூத விவிலியத்தை எழுதியவர் குறித்திருக்கும் பட்சத்தில் அது ‘பெத்துலா’ என்பது பயன்படுத்தப்பட்டிருக்க வேண்டும். ஏசுவின் கன்னி பிறப்பு யூத விவிலியத்தில் முன்னறிவிப்பு செய்ததாக கிறிஸ்தவர்கள் கூறியதற்கு இரண்டாம் நூற்றாண்டிலேயே யூதர்கள் ‘அல்மா’ என்பது இளம்பெண்ணே தவிர கன்னி என பொருள் கொள்ள முடியாது என எதிர்ப்பு தெரிவித்துள்ளதை ஒரு கிறிஸ்தவ அறிஞர் தமது நூலில் ஆவணப்படுத்தியுள்ளார். (ஜஸ்டினின் ‘யூதருடன் உரையாடல்). ஏறத்தாழ இருபது நூற்றாண்டுகளுக்கு பிறகு மிகச்சிறந்த கத்தோலிக்க ஆசிரியராக அறியப்படும் ரேமண்ட் ப்ரவுன் தனது ஆராய்ச்சி நூலான ‘Birth of the Messiah’வில் ஏசாயா 7:14 யூத சமயத்தில் ஏற்கனவே நடந்து முடிந்த நிகழ்வான ஹெஸேக்கியாவுக்கு அகாசு பிறந்ததை குறித்ததாகவே இருந்தது என்பதனை தொடக்ககால கிறிஸ்தவர்கள் அறிந்திருந்ததைக் குறிப்பிடுகிறார். மேலும் ஏசாயா7:14 ‘இளம்பெண்’ என மொழிபெயர்க்கப்பட்ட விவிலியங்கள் கிறிஸ்தவ அடிப்படைவாதிகளால் எரிக்கப்பட்டதையும், கத்தோலிக்க சபை மொழிபெயர்ப்பாளர்களை ஏசாயா7:14 ‘இளம்பெண்’ என மொழிபெயர்க்காமல் கன்னி என மொழிபெயர்க்க கட்டாயப்படுத்தியதையும் குறிப்பிடுகிறார். இறுதியாக அவர் வரும் முடிவு என்னவென்றால் “ஏசாயா 7:14 கூறும் நிகழ்வு காலத்தில் பின்னால் நடக்கப்போகும் கன்னி கருவுறும் நிகழ்ச்சி குறித்ததல்ல. மாறாக வெகு அண்மைக்காலத்தில் பிறந்திடும் -பெரும்பாலும் தாவீத் வம்சத்து- இயற்கையாக கருவுற்று பெறப்படும் குழந்தையை குறித்ததுவே ஆகும்.” (ரேமண்ட் ப்ரவுன் ”Birth of the Messiah”,பக் 148)ஆக கன்னி மரியாள் மூலமான பிறப்பு என்பது பிற்காலத்தில் யூதர்களின் விவிலிய மொழிபெயர்ப்பில் ஏற்பட்ட குளறுபடியின் அடிப்படையில் உருவாக்கப்பட்ட அற்புதச் செயலே ஆகும்.
ஏசுவின் பரம்பரை:


ஏசுவின் பரம்பரையும் லூக்காவிலும் (3:23-38) மத்தேயுவிலுமே (1:1-17) முக்கியமாகக் கூறப்படுகிறது. இதில் மத்தேயுவில் கொடுக்கப்பட்டிருக்கும் ஏசுவின் பரம்பரையை மூன்றாக பிரிக்கலாம்: யூத புராண நாயகனான ஆபிரகாமிலிருந்து யூத அரசனான தாவீது மன்னன் – 14 தலைமுறைகள் பின்னர் தாவீதின் காலம் முதல் பாபிலோனிய சிறைவாசம் வரை 14 தலைமுறைகள் பின்னர் விடுதலையான காலம் தொட்டு ஏசுவின் நாள் வரை 14 தலைமுறையினர். இரண்டு தலைமுறை வரிசைகளும் யோசேப்புவில் (Jospeh) முடிகின்றன. ஆபிரகாமிலிருந்து ஏசுவுக்கு இடையிலான தலைமுறைகள் மத்தேயுவின் படி 38 லூக்காவின் படி 55. இதில் ஏசுவின் தாயின் கணவரான யோசேப்புவிலிருந்து 14 தலைமுறைகளுக்கு இந்த இரண்டு காதைகளிலும் கூறப்பட்டுள்ள தலைமுறைகள் கொடுக்கப்பட்டுள்ளன.

லூக்கா மத்தேயு
1. யோசேப்பு – ஏலியின் குமாரன் யோசேப்புவை யாக்கோபு பெற்றான்
2. ஏலி – மாத்தாத்தின் குமாரன் யாக்கோபுவை மாத்தான் பெற்றான்
3. மாத்தாத் – லேவியின் குமாரன் மாத்தானை எலெயசார் பெற்றான்
4. லேவி – மெல்கியின் குமாரன் எலெயசாரை எலியூத் பெற்றான்
5. மெல்கி – யன்னாவின் குமாரன் எலியூத்தை ஆகீம் பெற்றான்
6. யன்னா – யோசேப்பின் குமாரன் ஆகீமை சாதோக்கு பெற்றான்
7. யோசேப்பு – மத்தத்தியாவின் குமாரன் சாதோக்கை ஆசோர் பெற்றான்
8. மத்தத்தியா – சேமேயின் குமாரன் ஆசோரை எலியாக்கீம் பெற்றான்
9. சேமேய் – யோசேப்பின் குமாரன் எலியாக்கீமை அபியூத் பெற்றான்
10. யோசேப்பு – யூதாவின் குமாரன் அபியூத்தை சொரொபாபேல் பெற்றான்
11. யூதா – யோவன்னாவின் குமாரன் சொரொபாபேலை சலாத்தியேல் பெற்றான்
12. யோவன்னா – ரேசாவின் குமாரன் சலாத்தியேலை எகொனியா பெற்றான்
13. ரேசா – சொராபாபேலின் குமாரன் எகொனியாவை யோசியா பெற்றான்
14. சொராபாபேல் சலாத்தியேலின் குமாரன் ஆமோன் யோசியாவை பெற்றான்

இந்த முரண்பாடுகளுக்கு கிறிஸ்தவ இறையியலாளர்கள் பல சமாதானங்களை கூறிவந்துள்ளனர். உதாரணமாக லூக்கா மேரியின் பரம்பரையையும் மத்தேயு யோசேப்புவின் பரம்பரையினையும் கூறியுள்ளதாக கூறப்படுகிறது. ஆனால் இரண்டு பரம்பரை கூறலும் யோசேப்புவினுடையதே. ஏசு காதை யூத புராணங்கள் மற்றும் யூத நம்பிக்கையின் மீட்பர் வருகையின் அடிப்படையில் ரோம சாம்ராஜ்ஜியத்தில் பரவிய போது எழுந்த எதிர்ப்பின் விளைவாக உருவாக்கப்பட்டதே காலத்தால் பிற்பட்ட மத்தேயு மற்றும் லூக்கா ஏசு காதைகளில் காணப்படும் இந்த விஸ்தீரண தலைமுறைகள் விவரணம். ஏறத்தாழ 1940 ஆண்டுகளுக்கு பின்னர் இதே ஏசு காதைகளின் அடிப்படையில் ஜெர்மானிய இறையியலாளர்கள் ஏசு யூத குலத்தை சேர்ந்தவரே அல்ல என திறமையாக வாதிட்டதையும் பிரச்சாரம் செய்ததையும் சுட்டிக்காட்டுகிறார் பேராசிரியை சூசன்னா கெர்ஷல் தமது 2005 உரையில் (ஆரிய ஏசு:கிறிஸ்தவர்கள் நாசிக்கள் மற்றும் பைபிள்). ஏசுவின் வரலாற்றுத்தன்மை வேண்டிய உருவெடுக்கும் திரவ நிலை கொண்டதென்பதற்கு மற்றொரு சான்று இது.
ஆக, ஏசுவின் பிறப்பின் வரலாற்று அடிப்படை என்பது எவ்விதத்திலும் ஆதாரமற்ற வலுவற்ற சீட்டுக்கோட்டையே ஆகும். அல்லது ஏசு கூறியதாக நம்பப்படும் வார்த்தைகளில் கூறுவதானால் மணல் மீது கட்டிய வீடு. அடுத்ததாக ஏசு செய்த அற்புதங்களின் புராணத்தன்மையைக் காணலாம். (தொடரும்)

Advertisements

2 Responses to ஏசு பிறப்பு: புராணமா? வரலாறா? குறிக்கோளுடன் உருவாக்கப்பட்ட கதையா?

  1. cdfkdk says:

    அவர் மறுபடியும் வருவார் அப்பா தெரியும் எது உண்மை . தன்னை ஞானி என்று சொல்பவன் மூடனை இருக்கிறன் .கிறிஸ்து இப்போதும் அற்புதங்கள் செய்து வருகிறார்

  2. mary says:

    Jesus will be coming soon no one can withstand on judgement day so kindly repend and get salvation from Jesus. No one can escape on judgement day and we cannot negotiate on that day and who ever does good the good deeds come and who ever does bad deeds that bad deeds come we do not know when the thief will enter into the house for thefting like that Lord Jesus will be coming soon. May Lord Jesus Bless all out worldly people. According to Jesus only the history was divided B.C. So, Read bible holy and truly and get all the good and wonderful news about Our Lord Miracle working Jesus.

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s

வரலாற்று உண்மைகளை அலசுவோமே

வரலாற்று உண்மைகளை அலசுவோமே

வரலாற்று உண்மைகளை அலசுவோமே

Dwindling In Unbelief

வரலாற்று உண்மைகளை அலசுவோமே

Larry Hurtado's Blog

Comments on the New Testament and Early Christianity (and related matters)

TaborBlog

Religion Matters from the Bible to the Modern World

தமிழன்

வரலாற்று உண்மைகளை அலசுவோமே

வரலாற்று உண்மைகளை அலசுவோமே

இறையில்லா இஸ்லாம்

வரலாற்று உண்மைகளை அலசுவோமே

Devapriyaji - True History Analaysed

வரலாற்று உண்மைகளை அலசுவோமே

வரலாற்று உண்மைகளை அலசுவோமே

கிறிஸ்தவம் பலானது

உண்மைகளை அறிவோம் தீமைகளை விரட்டுவோம்

World Watch- Devapriyaji

வரலாற்று உண்மைகளை அலசுவோமே

%d bloggers like this: